புன்னகை அழகு

 


நாள்தோறும்..

நம் உள்ளத்து உணர்வுகளை ‘பளிச்’சென வெளிக்காட்டுவது நம் முகம். அந்த முகம் எப்போதும் சிரித்துக் கொண்டே இருந்தால் எத்தனை அழகாக இருக்கும்?

ஒரு புன்னகை சிந்த விலையேதும் தேவை
யில்லை. ஆனால் அந்த ஒரு புன்னகை அவரை பெரிய கூட்டத்திலும் கூட நடுநாயக
மாக்கும் தன்மையுடையது.

உடலில் 300 வகையான தசைகள், நாம் சிரிக்கும்போது அசைகின்றன. அதனால் நம்  மனமும் தேகமும் சிரிக்கும்போது புத்துணர்ச்சியும் , ஆரோக்கியமும் பெறுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

ஆய்வொன்றின் படி ஒரு நாளைக்கு சராசரி மனிதன் 15 தடவைகளும், குழந்தைகள் கிட்டத்தட்ட 400 தடவைகளும் சிரிக்கின்றோமாம். இதிலிருந்து மனிதனுடைய வயதிற்கேற்றவாறு சிரிப்பு குறைந்துகொண்டு
போவதை அறிய முடிகிறது.

நாம் சிரிக்கும்போது 'என்டோர்பின்ஸ்' என்னும் திரவப்பொருள் நம் மூளையில் உருவாகி ஒருவகையான நம் உடலுக்குப் புத்துணர்ச்சி ஏற்படுகிறது.

‘சிடுசிடு’வென்ற முகத்துடன் இருப்பவரை யார்தான் விரும்புவர்? சிரிப்பதற்கு கஞ்சப் படுபவர்கள் பல சந்தோஷங்களை வாழ்வில் இழந்தவர்களாவர். சிரிப்பதற்கு ஆகும் நேரம் சிறிது; ஆனால், அதன் பலனோ மிகப் பெரியது!

வாயால் சொல்லும்வரை காதல் புரிவதில்லை! அது போல் புன்னகை புரியும் வரை அதற்கு மதிப்பில்லை!புன்னகையை விலைக்கோ, கடனுக்கோ வாங்க முடியாது. திருடவும் முடியாது!

ஒரு சின்னக் குழந்தையின் சிரிப்பு நம் கவலைகளை மறந்து அதனுடன் விளையாடத் தூண்டுவதை நம்மால் மறுக்க முடியுமா!

முதியவர்களின் சிரிப்போ அவர்களது வெற்றிகரமான வாழ்வின் பிரதிபலிப்பு!

மோனாலிசாவின் மயக்கும் சிரிப்பை மறக்க முடியுமா?

ஃபெங்ஷுயி சிரிக்கும் புத்தரைப் பார்க்கும்போதே நம் மனதில் மகிழ்ச்சி ஏற்படுகிறதே! வாழ்க்கையை சிரித்துக் குதூகலித்துக் கடக்க வேண்டும் என்பதைச் சொல்வதைப் போல இவர் சிரித்துக் கொண்டே இருக்கிறாராம்! இவர் உருவம் வீட்டில் இருந்தால் வளமும், மகிழ்ச்சியும்,  செல்வமும்
வீட்டில் பெருகும் என்பது ஒரு நம்பிக்கை!

மருத்துவர் மற்றும் நர்ஸூகளின் பரிவான புன்னகை எத்தனை பெரிய நோயாளியையும் சீக்கிரம் குணமடையச் செய்யும்!

காதலர்களுக்கிடையே, தம்பதிகளுக்கிடையே ஏற்படும் மன வேறுபாட்டை நிமிடத்தில் விலக்கி, உடைந்த இதயங்களை இணப்பது அன்பான காதல் புன்னகையே!

வரவேற்பாளர்களின் புன்னகை இனிய வரவேற்பு!

விற்பனையாளார்களின் புன்னகை அவர்களின் வியாபார உத்தி!

சிரித்த முகத்துடன் இருப்பவர்களை உலகில் எவரும் விரும்புவர்!

நிறைவான மனதுடன், மகிழ்ச்சியாக வாழும் மனிதனால்தான் சிரித்த முகத்துடன் உலவ முடியும். அவர்களுக்கு வாழ்க்கையே ஒரு திருவிழா! அவர்களோடு பேசுபவர்களுக்கும், பழகுபவர்களுக்கும் கூட அந்த மகிழ்ச்சி தொற்றிக் கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.

மனம் நிறைந்த மகிழ்ச்சியால் மலரும் புன்னகை எவரையும் வசப்படுத்தும்! சின்னப் புன்னகை பெரிய காரியங்களைக்கூட நிறைவேற்றும்!

நம் அன்றாட வாழ்க்கையில் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது.நாம் எந்த
விஷயத்தையும் எப்படி அணுகுகிறோமோ, அதன்படிதான் விளைவுகளும் இருக்கும். நம் முகத்தின் ஒரு சின்ன வளைவு, பல பிரச்சினைகளை நேராக்கும் தன்மையுடையது.

பொய்யும் புன்னகையும் உடன் பிறந்தவை! பிடிக்காதபோது பொய்யாக புன்னகைக்கலாம்! மகிழ்ச்சியாக இருப்பதாக பொய்யாகப் புன்னகைத்தும் காட்டிக் கொள்ளலாம்!

நம் மனதில் கவலையும், துன்பமும் தோன்றும்
போதெல்லாம் 'இதுவும் கடந்து போகும்' என்பதை நினைவில் கொண்டால் முத்தில் சுருக்கங்கள் நீங்கி புன்னகை தவழ்வதை உணரலாம்!

எந்த விஷயத்துக்கும் கோபப்படாமல், சிடுசிடுக்காமல், மலர்ந்த முகத்துடன் காணப்படுவது ஒரு சிறந்த கலை. அதற்கு நல்லெண்ணெங்கள், கடவுள் நம்பிக்கை, திருப்தியான மனநிலை ஆகியவை அவசியம்.

‘நாம் ஒவ்வொரு முறை சிரிக்கும் போதும் நம் ஆயுள் கூடுவதாக’க் கூறப்படுவதால், இன்று சிரிப்பதற்குக் கூட சங்கங்கள் ஆரம்பிக்கப்
பட்டுள்ளன!

இன்றைய மோசமான கொரோனா உலகையே தாக்கி கோர தாண்டவம் ஆடும்போது சிரிப்பது எப்படி என்கிறீர்களா? தீயதையே என்றும் எண்ணாமல் 'இதுவும் கடந்து போகும்' என்ற எண்ணத்துடன் அனைவரிடமும் மனம் திறந்து மகிழ்ச்சியாக சிரித்துப் பேசும்போது நம் கவலைகள், பயங்கள் மறைந்து ஒரு பாதுகாப்பு உணர்வு ஏற்படுவதை உணரலாம்!.  பிறர் சிரிக்கும்படி வாழாமல், சிரித்து வாழ்வோம்!

Comments

Popular posts from this blog

கண்ணாமூச்சி

அசரீரி

இணைந்த மதங்கள்