பாராட்டு ஒரு டானிக்
நாள்தோறும்..
எல்லா பேச்சுகளிலும் நமக்கு மிகவும் இனிமையானதும், மகிழ்ச்சி தருவதும் பிறர் நம்மைப் பாராட்டிப் பேசும் வார்த்தைகளே' என்பது ஒரு அறிஞரின் கூற்று.
பாராட்டை விரும்பாத மனிதர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். முகத்திற்கு நேராக மறுத்தாலும் உள்ளுக்குள் மனது மற்றவர்கள் நம்மைப் புகழ்வதை விரும்புகிறது. அடுத்தவர் செய்யும் செயல் மிகச் சாதாரண மானதாக இருந்தாலும் அதனை உணர்ந்து பாராட்டும் பண்பு அனைவருக்கும் இருப்பதில்லை.
எத்தனை சுலபமான, சிறிய செயலையும் நேர்த்தியாக செய்தாலும் அதைப் பாராட்டுவதில் என்ன தவறு?அது தரும் சந்தோஷம் பாராட்டப் பட்டவர்களே அறிவர்.வெளிநாட்டினர் சிறு விஷயத்திற்கு கூட நன்றி சொல்வார்கள். அவர்கள் செல்லும் வழியில் நிற்கும் நாம் சற்று நகர்ந்து கொண்டாலும் 'தேங்க்யூ' என்று முகமலர சொல்லிவிட்டு செல்வார்கள்!
'கடமையைச் செய், பலனை எதிர் பாராதே'என கீதை சொன்னாலும், தொடர்ந்து முறையாக நம் கடமையைச் செய்ய, முதல் முறை செய்த வேலைக்கு ஒரு சிறிய பாராட்டு தேவைப்படுகின்றது. இந்த பாராட்டு என்பது மிகப்பெரிய பரிசாகவோ, இல்லை பணமாகவோ இருக்கவேண்டிய அவசியம் இல்லை. நன்றி என்ற ஒரு சொல்லே போதுமானது. இந்த மூன்றெழுத்து வார்த்தைக்கு ஆசைப்படாத மனிதர் உண்டோ!
மனிதனுக்குள் காணப்படும் மிக உயரிய பண்புகளில் இந்த பாராட்டுதலும் ஒன்று. சிலருக்கு மற்றவர்களைப் பாராட்டுவது என்பதே தெரியாது. மற்றவர்கள் நம்மைப் பாராட்ட வேண்டும், ஆனால் நாம் யாரையும் பாராட்டி விடக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருப்பார்கள். மற்றவர்களைப் பாராட்டினால் இவர்களின் கவுரவம் பாதிக்கப்படும் என்றும் பாராட்டு பெறுபவர்களுக்கு தலைக்கனம் கூடிவிடும் என்றும் கருதுவார்கள்!
இரண்டு வயதுக் குழந்தை கண்டபடி கோடுகளை வரைந்து காக்கா, குருவி என்று காட்டும்போது, 'ஜோராக வரைந்திருக்கிறாயே' என்று பாராட்டும்போது, அந்த உற்சாகம் பின்னால் அந்தக் குழந்தை பெரிய ஓவியராக வழி வகுக்கும்!
படிக்கும் குழந்தைகளை ஒப்பிட்டுப் பேசுவது இக்காலத் தாய்மார்கள் செய்யும் மிகப்பெரிய தவறு. குழந்தைகள் குறைந்த மதிப்பெண் வாங்கினாலும்,அவர்களைப் பாராட்டி, தட்டிக் கொடுத்து அதிக மதிப்பெண் பெறவேண்டு
மென்பதை அன்போடும், ஆதரவாகவும் சொல்வதுதான் புத்திசாலித்தனம்!
பல இல்லத்தரசிகளுக்கு எப்பொழுதும் ஒரு குறை! தான் எத்தனை அருமையாகச் சமைத்தாலும், வீட்டை சிறப்பாக வைத்துக் கொண்டாலும் தன் வீட்டார், முக்கியமாக தன் கணவரிடமிருந்து ஒரு சின்ன பாராட்டு கூட கிடைப்பதில்லையே என்று!
ஒரு சின்ன பாராட்டு, பெரிய மலை போன்ற காரியத்தைக் கூட ஆர்வத்துடன், எளிதாகச் செய்ய வைக்கும் ஆயுதம் என்பதைப் பல கணவர்கள் அறிவதில்லை.
குடும்பத்தில் ஒருவருக்கொருவர் மற்றவர்களின் வேறுபட்ட திறமைகளை மதித்துப் பாராட்டிக் கொள்வதும், அதன் சார்பாக சின்னச் சின்ன பரிசுகள் கொடுத்துக் கொள்வதும் குடும்பத்தினருக்குள் பாசப் பிணைப்பு பெருக உதவும்.
சின்னக் குழந்தைகளின் மழலைப் பாட்டு, கிறுக்கல் ஓவியம், பள்ளி, கல்லூரி குழந்தைகளின் விளையாட்டுத் திறமை,மனைவியின் ஸ்பெஷல் சமையல் ,துணைவரின் அலுவலகத் திறமை, பக்கத்து வீட்டு பாட்டியின் இழை விலகாத கோலம், எதிர் வீட்டுத் தோழியின் எம்பராய்டரி வேலை.... இப்படி பாராட்ட எத்தனை விஷயங்கள்!
ஒரு வேலையை எவ்வளவு உழைத்து செய்தாலும், அதற்காக நான்கு பேருக்கு மத்தியில் நம்மை ஒருவர் பாராட்டும்பொழுது, அந்த வேலையைச் செய்ய நாம் பட்ட துன்பங்கள் அனைத்தும் மறைந்து மகிழ்ச்சி ஏற்படுகிறது. அவ்வளவு கடினமாக உழைத்தும், அதற்கான ஒரு சிறிய பாராட்டு கூட கிடைக்கவில்லை என்றால் நமக்கு மனவருத்தம்தான் ஏற்படுகிறது.
வெற்றிகளைக் கொண்டாடக் கற்றுக்கொள்ள வேண்டும். சிறு விஷயமாக இருந்தாலும் அதனைக் கொண்டாடுவது, அதைவிட மிகப் பெரிய வெற்றிகளை அடைவதற்கு வித்தாக அமையும்!
பாராட்டும் பொழுது 'நீ இப்படி செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்' என்கிறபோது பாராட்டியதற் கான அர்த்தமே இல்லாமல் போகிறது. பாராட்டும் பொழுது 'ஆனால்' என்ற வார்த்தை வந்தால் அதற்கு முன் கூறிய பாராட்டு வார்த்தைகள் மதிப்பிழக்கின்றன.
மனம் விட்டுப் பாராட்டுங்கள்! பாராட்டினால் ஒரு பெரும் பயனும் உண்டு. பிறர் நம் செயலைப் பாராட்டும்போது,நம்மை அறியாமல் நமக்குள் இருக்கும் திறமை வெளிப்பட்டு, அதன் மூலம் நாம் அடையும் முன்னேற்றம் வாழ்க்கையின் ஒரு திருப்பு முனையாக அமைய வாய்ப்புண்டு!
நாற்பது வருடங்களுக்கு முன் என் சிறு துணுக்கு ஒரு பிரபல பெண்கள் பத்திரிகையில் பிரசுரமானது. அதைப் பார்த்த என் அம்மாவும், கணவரும் என்னைப் பாராட்டி, நிறைய எழுது எனக் கொடுத்த ஊக்கமே, இன்று நான் பல பத்திரிகைகளிலும் எழுத காரணமாயிற்று!
குழந்தைகளுக்கு எந்தத்துறையில் ஆர்வம்,ஈடுபாடு உள்ளதோ அதை மனமாரப் பாராட்டுங்கள்! உங்கள் பாராட்டு அவர்களிடம் அற்புதங்கள் செய்வதைக் கண்டு மகிழ்வீர்கள்.
கணவன், மனைவிக்குள்'ஈகோ' இல்லாமல் பாராட்டிக் கொள்வது, தாம்பத்தியம் மேலும் இறுக வழி செய்யும்!
அரசியல் வாதிகளுக்கும்,சாதனை செய்தவர்களுக்கும் பாராட்டு விழா நடத்துவது அவர்கள் மேலும் சிறந்த முறையில் மக்களுக்கு பணி ஆற்ற வேண்டும் என்பதற்கே!
கடவுளைக் கூடப் பாராட்டி,துதி செய்துதான் நாம் பிரார்த்தனை செய்கிறோம்!
ஒரு சிறு விதை விருட்சமாக வளர உதவுவது தண்ணீர்! அது போல ஒருவரின் செயலைப் பாராட்டுவதின் மூலம் அந்த செயல் மென்மேலும் சிறப்படையும்!
பாராட்டும்போது, வெறும் வாய் வார்த்தையாக இல்லாமல், பெருந்தன்மையோடும், நல்ல மனதோடும், உண்மையாகவும் பாராட்டுங்கள்!
பாராட்டில் போலிப்பாராட்டும் உண்டு! இதில் நாம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! நம்மைப் பாராட்டுவதுபோல் தங்கள் வேலைகளை நம் தலையில் கட்டி விட்டு 'ஹாயாக' இருக்கும் சோம்பேறிகளை இனம் கண்டு ஒதுங்க வேண்டியது உங்கள் திறமை!!
Comments
Post a Comment