நற்பொழுது மலரட்டும்!




நாள்தோறும்..

இன்றைய உலகத்தை பார்க்கிறேன். பரபரப்புடன் படு வேகமாக இயங்கிக் கொண்டிருந்த இந்த உலகம் கடந்த இரண்டு வருடங்களாக ஏன் இப்படி சட்டென்று அமைதியானது?

இது சாதாரண அமைதியில்லை..
மயான அமைதி...

எல்லாம் இன்ப மயம் என்று ஆடிப்பாடிக் கொண்டிருந்த நாம் ஆடிப் போயிருப்பது நம்மைக் கண்டு அஞ்சாத ஒரு சின்னக்கிருமியால்...

எதனால் இந்த நிலைமை நமக்கு? என்ன தவறு செய்தோம்?

ஒட்டு மொத்த உலகத்திற்கும் ஏன் இந்த தண்டனை?

நம்மைக் காப்பாற்றுவார் என்று நம்பிய கடவுளும் நம் கண்ணுக்கெட்டாத தூரத்தில் தம்மை மறைத்துக் கொண்டது ஏன்?

இவை விடை தெரியாத கேள்விகள்...

மனிதன் மமதை கொண்டு எல்லாம் என்னால் முடியும் என்று மார்தட்டிக் கூறி இறைவன் தந்த பூமி ஆறு குளம் நீர்நிலை மலைகள் தெளிந்த வானம் இவற்றை மாசுபடுத்தியபோது பொறுமையோடு இருந்த அந்த இயற்கைக்கும் கோபம் வந்து விட்டதோ...

என்றும் உறங்கா நகரமான நியூயார்க் அமைதியாக உறங்கிக் கிடக்கிறது...

காதல் களியாட்டங்களுக்கு பெயர் பெற்ற பாரிஸில் இன்று அவற்றின் எதிரொலி மட்டுமே கேட்கிறது...

பழமை சின்னங்களின் சிகரமான ரோம் இன்று பாலைவனமாகக் காட்சி தருகிறது...

அனைத்து நாடுகளையும் ஆட்டிவைத்த இங்கிலாந்தின் அரசி கூட இன்று அறையின் மூடிய கதவுகளுக்குப் பின்னிருந்து பேசும் நிலை...

பக்தியும் தெய்வீகமும் நிறைந்த 
பாரோர் தரிசித்து அருள் பெற்ற
பாரத தேசத்தின் பெருமைமிகு
பலப்பல புராணப் புகழ் பெற்ற ஆலய தெய்வங்கள் இன்று பூட்டிய கதவுகளின் பின்னே...

மிகப் பெரும் சாம்ராஜ்யங்களாய்
சிறப்புற்ற நாடுகள் இன்று மௌனமாய் நிற்கின்றன
செய்வதறியாமல்...

விஞ்ஞான முன்னேற்றத்திற்கு முன்னோடியாயிருந்த நாடுகள் மண்டியிட்டு நிற்கின்றன இன்று...

புகழ்பெற்ற ஆலயங்கள் தேவாலயங்கள் மசூதிகள் பக்தர்களின்றி பரம அமைதியாய்...

மக்கள் கூடிக் கொண்டாடும் திருமணங்கள்,திருவிழாக்கள், பண்டிகைகள், பாராட்டு விழாக்கள் காண்பதே அரிதாகியதே...

பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், பள்ளி கல்லூரிகள், அலுவலகங்கள்  இன்று ஆட்களின்றி அவலமாய்...

புகைவண்டி, பேருந்து, ஆகாய விமானங்களுக்கும் இதுவரை இல்லாத ஓய்வு...

நம் பெருமைகள், பட்டம், பதவி, பணம் அனைத்தும் மதிப்பிழந்து நிற்கின்றன மௌனமாய்...

பறவைகளும் மிருகங்களும் சுதந்தரமாய் கொரோனா பயமின்றி வெளியில் வலம்வரும்போது நாம் இருப்பதோ மூடிய வீடுகளுக்குள்...

விதவிதமாய் ஆடைகளும் ஆபரணமும் அணிந்து வீதிகளில் உலவிய நாம் இன்று வீட்டினுள் விட்டேற்றியாய்...

திருடர்கள் மட்டுமே உபயோகித்த முகமூடிகள் இன்று அத்யாவசியமாய் அனைவர் முகத்திலும்...

நாம் பாடுபட்டு சேர்த்த பொன்னும் பொருளும் இன்று நாம் உண்ணும் உணவிற்கு மட்டுமே...

பண்டைய நாட்களின் பாரம்பரியத்தை மறந்த நாம் அதனை உணரவே இந்த கஷ்டமோ...

பல நல்ல பழக்க வழக்கங்களையும் பண்புகளையும் நாகரிகம் என்ற பெயரில் கை கழுவிய நம்மை 'கை கால்களை சுத்தமாகக் கழுவுவது' ஒன்றே சரியானவழி எனக் காட்டுகிறதோ கொரோனா...

பள்ளிக் கூடங்களும் பணியிடங்களும் இன்று நம்  வீட்டில் பள்ளியறையில்...

அகிலம் முழுதும் அமைதியில் அடங்க அளவிலா மகிழ்ச்சியுடன் ஆனந்த ராகம் பாடுபவை பறவைகளும் மிருகங்களும் தாவரங்களும் நதிகளும்
அழகிய  இயற்கையும் மட்டுமே...

உலகம் நம்முடையது நாம் எதுவும் செய்யலாம் நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற இறுமாப்பு இன்று சின்னக் கிருமியின் முன்னே சின்னாபின்னமாகிப் போனதே...

இன்று நம் கையில் கிடைத்துள்ள வெறுமையான நீண்ட நாட்களை வீணாக்காமல் நல்ல விஷயங்களை அறிவோம்...

கிடைத்த நாட்களில் நம்மை செம்மைப் படுத்திக் கொள்ளவும், பகை வெறுப்பு கோபம் போன்றவற்றை நம்மிடமிருந்து விலக்கி  வாழவும் கற்போம்...

வாழ்க்கை வெறும் நீர்க்குமிழி..எதுவும் நம்முடையதல்ல என்பதை உணர்த்தி நமக்கு பாடம்
புகட்டும் நாட்கள் இவை...

தனிமை கொடுமை..அதிலும் யாரும் அருகில் இல்லாத நோயுடனான தனிமை நரகம் என்பதை நினைக்கவே நெஞ்சு பதறுகிறது...

இனிவரும் நாட்களை வீணாக்காமல் நல்லமுறையில் வாழ்வோம்...

இறைவனிடம் இறைஞ்சுவோம்...

இந்த நாட்களின் இன்னலிலிருந்து நமக்கு விடுதலை வேண்டி தண்டனிடுவோம்...

தலை வணங்கி 'தயை புரிவாய் இறைவா' எனவேண்டுவோம்...

நமக்கு மட்டுமின்றி இவ்வுலகம் முழுதும் இந் நோயிலிருந்து விரைவில் நலம் பெற தெய்வம் ஒன்றே நம் நம்பிக்கை ஆதாரம்...

கொரோனா என்ற அரக்கனிடமிருந்து நம்மைக் காப்பாற்ற இறைவன் எடுக்கப் போகும் இன்னொரு அவதாரம் என்னவோ...

இந்த இக்கட்டான நேரத்தில் தம் சுகம் மறந்து கண் துஞ்சாமல், பசி நோக்காமல் கருமமே கண்ணாக நாளும் பொழுதும்
கொரோனா நோயாளிகளை கவனித்து குணப்படுத்தும் தன்வந்திரிகளாகத் திகழும் நம் மருத்துவர்களுக்கு நன்றி சொல்லி வாழ்த்துவோம்💐

அல்லன நீக்கி நல்லன செய்வோம்...
அவனருள் வேண்டி அவன் தாள் பணிவோம்...
நாளைய பொழுது நற்பொழுதாக மலர ஆண்டவன் அருளட்டும்🙏🏼

Comments

Popular posts from this blog

தணிக்கை

காதல்

அசரீரி