பாரீஸ் பயணம்..!
எனக்கு சிறுவயது முதலே ஏதாவது வெளிநாடு சென்றுவர வேண்டுமென்று ஆசை. அதிலும் பாரீஸூம், ஸ்விட்சர்லாந்தும் என் கனவு இடங்கள்...
ஆனால் எங்களைப் போன்ற நடுத்தரக் குடும்பத்தினருக்கு இதெல்லாம் கைக்கெட்டாத ஆசை என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்வது வழக்கம்!என்னுடைய ஆசை சில ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேறியதை நினைத்தால் ஒரேசிலிர்ப்பாக உள்ளது.
என் மூத்த மகன் ஜெர்மனியில், ஸ்டுட்கார்ட் நகரிலுள்ள உலகப் புகழ் பெற்ற 'மாக்ஸ் ப்ளான்க்' யூனிவர்ஸிடியில் டாக்டர் பட்டம் பெற்றுப் பணியாற்றிக் கொண்டிருக்கிறான். அவனைப் பார்க்க அங்கு சென்றபோது என்னுடைய கனவு இடங்களான பாரீஸையும் கண்டு ரசித்து, சுற்றிப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.
பாரீஸ் உலகத்தின் பேரழகையெல்லாம் தன்னுள் வைத்திருக்கும் ஒரு அற்புத நகரம்! உலகத்தை ஆட்டிப் படைத்த மாவீரன் நெப்போலியன் அரசாண்ட இடம்! உலகத்தை தன் புன்னகையால் மயக்கிய மோனாலிசா ஓவியம் உருவானது இங்கேதான்! உலக அதிசயங்களில் ஒன்றான ஈஃபில் டவர் கோபுரம் உள்ள நகரம்!
மனதை மயக்கும் சோப்புகள், மேக்கப் பொருட்கள், வாசனை சென்ட்டுகளின் தாய்நாடே பாரீஸ்தான்! உலகத்திலேயே இரவு கேளிக்கைகளின் மாபெரும் இருப்பிடம்... எல்லாவற்றையும்விட இங்கிலாந்து இளவரசி டயானா விபத்தில் உயிர் விட்டதும் இங்கேதான்!இப்படி எல்லா காலத்திலும் வரலாற்றின் சுவடுகளில் பாரீஸ் பின்னிப்பிணைந்து விட்டிருக்கிறது.
பழமையும், புதுமையும் கலந்த ஒரு வித்தியாசமான நகரம் பாரீஸ். பழங்காலத் தெருக்கள், வீடுகள், கட்டிடங்கள் அனைத்தும் பழமையின் பெருமையை சொல்லிக் கொண்டே இன்றைய புதுமை மெருகுடன் பளிச்சென்று காட்சி அளிகக்கின்றன. குப்பை, தூசுகள் என்று எதுவுமே இல்லாததனால்,
அத்தனை கட்டிடங்களும் புதிதுபோல் பளிச்சிடு
கின்றன. பாரீஸின் அழகை ரசிக்க மாடிபஸ்கள்,
ரயில்கள், படகுகள் மூன்றிலும் செல்லலாம்.
பாரீஸ், நூற்றி ஐந்து சதுர கிலோ மீட்டர் அளவுள்ள சிறிய நகரம். நகரின் இடையே ஓடும் ஸீன் நதியின் கரை ஓரத்தில்
தான் அத்தனை கட்டிடங்
களும் அமைந்துள்ளன!
சரித்திரப் பின்னணி கொண்ட முப்பத்திரண்டு பாலங்கள் இந்த நதியில் இருக்கின்றன. அழகிய பாலங்கள் அமைந்த உலகின் ஒரே நதி இதுதான். அவற்றில் பாண்ட் டி ஆர்ட்ஸ், பாண்ட் ராயல், பாண்ட் ஸில்லி இவை வித்தியாசமான தனிச்சிறப்புடைய பாலங்கள். இரவு ஸீன் நதியில் படகுப் பயணம் செய்து இநதப் பாலங்களின் கலையழகு இரவு விளக்குகளின் கண்கவர் ஒளியில் ரசித்தபோது
'ஹைய்யோ!...' என்று மனசு குதூகலித்தது.
எங்களுக்கு ஈஃபில் டவரைப் பார்க்கத்தான் ஆவல் மிக அதிகமாக இருந்தது. ஒரு வழியாக அருகே போய் அதனை நேரில் கண்டபோது அதன் பிரம்மாண்டத்தைக் கண்டு பிரமித்து நின்று
விட்டோம்.அடேயப்பா.. என்ன உயரம்! நிமிர்ந்து பார்த்தால் கழுத்தை வலிக்கிறது. இதில் இரண்டு நிலைகள் உள்லன. உச்சி வரை செல்ல படிகளும் 'கேபிள்கார்' என்ற லிஃப்டுகளும் உள்ளன. அதற்குக் கட்டணம் உண்டு.
பிரஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டைக் குறிக்கும் வகையில் 1889-ல் பாரீஸில் 'உலக்ப் பொருட்காட்சி' நடந்தபோது 'குஸ்தவே ஈஃபில்' என்ற கட்டிடக் கலை வல்லுனரால் உருவாக்கப்பட்டது தான் இந்த ஈஃபில் டவராம்!
வெறுமனே முரட்டு இரும்புக் கம்பிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த 'டவர்', பாரீஸின் மென்மையான அழகிற்கு சரியாக இருக்காது என்று கலை விமர்சகர்கள், எதிர்த்தார்களாம். ஆனால் இன்றோ பாரீஸ் என்றாலே ஈஃபில் டவர் என்னுமள
வுக்கு புகழ் பெற்று, உயர்ந்து நிற்கிறது இந்த கோபுரம்!
இதன் உயரம் 320.75 மீட்டர். இதன் எடையோ 7000
டன்கள்.12000 இரும்புத் தகடுகளையும் அவற்றை இணைக்க ஏழு மில்லியன் ஆணிகளும் பயன் படுத்தப்பட்டதாம்!
பாரீஸின் நடு நாயகமாக விளங்கும் ஈஃபில் டவர், எங்கிருந்து பார்த்தாலும் தெரிகிறது. இரவில் இதன் மின் விளக்கு அலங்கா
ரங்களும், வண்ணமயமான வாண வேடிக்கைகளும் அந்த இடத்தையே சொர்க்கமாக்குகின்றன.
இங்குள்ள மியூசியங்கள் ஐரோப்பிய நாடுகளின் பண்பாடு, கலாச்சாரம், நெப்போலியன் ஆட்சி பற்றிய குறிப்புகள் என்று நம்மை பதினேழாம் நூற்றாண்
டுக்கே அழைத்துச் செல்கின்றன. இதில் மிக அவசியம் காண வேண்டியது உலகின் மிகப்பெரிய மியூசியங்களில் ஒன்றான லூவ்ரே. இதில்தான் மோனாலிஸாவின் ஒரிஜினல் ஓவியம் உள்ளது.
இங்கு 3,00,000 ஓவியங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கலை நுணுக்கத்துடன் உள்ளது. இந்த லுவ்ரே மியூசியம் இருக்கும் கட்டிடம் கூட அரசரின் அரண்மனையாக இருந்ததாம். இதற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடியாலான பிரமிடு, காலை நேர சூரிய வெளிச்சத்தில் பல வண்ணங்களில் வர்ண ஜாலம் காட்டுவது அற்புதமாக உள்ளது!
மாவீரன் நெப்போலியனால் இருநூறு வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட ஆர்க்-டி-டிரியாம்பே, நம் இந்தியா கேட் போல இருக்கிறது. இந்த வளைவின் உச்சியில் இருக்கும் முப்பது கேடயங்களும், நெப்போலியன் போரிட்டு வென்ற நாடுகளைக் குறிக்கின்றன.
ஸேகர் கோயர், நாத்ரடாம் இரண்டும் வரலாற்றுப் புகழ் பெற்ற கிறித்தவப் பேராலயங்கள். ஸேகர் கோயர் சர்ச், மெளண்ட் மாட்ரே என்ற சிறிய குன்றின் மீது, வெண்ணிறக் கற்களால் ரோமானியக் கலையழகுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலயத்துள் நடுநாயகமாக அன்னை மேரி கைகளில் ஏசுவைத் தாங்கி நிற்கும் காட்சி அற்புதமாக உள்ளது. சுற்றிலும் பல வண்ணக் கண்ணாடிகளில் அமைக்கப்பட்டுள்ள ஏசு காவிய ஓவியங்கள் கண்ணைப் பறிக்கின்றன. இந்த ஆலயத்திலுள்ள மணி பத்தொன்பது டன் எடை கொண்டது. உலகின் மிக கனமான மணிகளுள் இதுவும் ஒன்று.எழுநூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த தேவாலயம். பாரீஸில் நடுநாயகமாய் நின்று 'தி லேடி ஆஃப் பாரிஸ்' என்று சிறப்பாக அழைக்கப்படுகிறது. நெப்போலிய பிரான்ஸ் நாட்டு சக்கரவர்த்தியாக இங்குதான் முடிசூட்டிக் கொண்டார். பிரான்சின் வீராங்கனையான ஜோன் ஆஃப் ஆர்க்கின் உருவம் தெற்கு கோபுரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சர்ச்சில் விடாமல் பைபிள் ஓதப்படுகிறது.
ஈஃபில் டவரையும் சேர்த்து பாரீஸின் அழகை ரசிக்க அதற்கெனவே கட்டப்
படுள்ள 210 மீட்டர் உயரமுள்ள மெளண்ட் பர்ணாஸுக்கு செல்ல வேண்டும்! 1973ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நவீன கட்டிடம், உயர்ந்து நிற்கிறது. 59 மாடிகள் கொண்ட இதன் உச்சியை அடைய லிஃப்டில் ஆகும் நேரம் வெறும் ஐந்து நொடிகள்! கண்மூடித் திறப்பதற்குள் 59ம் மாடி வந்து விட்டது! என்ன வேகம்! மேலிருந்து பார்க்கும்போது ஈஃபில் டவரும், பாரீஸ் நகரமும், ஸீன் நதியும் மனதைக் கொள்ளை கொள்கின்றன!
இங்கு ரயில்கள் பூமிக்கு அடியில் செல்வது வித்தியாசமான அனுபவம்! கார் பார்க்கிங்குகளும் அண்டர்கிரெளண்டில் உள்ளதால் தெருக்களில் கூட்டம், நெருக்கடி சிறிதும் இல்லை. பழைய காலக் கட்டிடங்களை பழமை மாறாமல் ஹோட்டல்
களாகவும், கடைகளாகவும் மாற்றியுள்ளனர்.
ஸீன் நதியில் இரவில் படகுப் பயணம் செய்வது மிக உற்சாகமான அனுபவமாக உள்ளது, டெலிபோன் ரிசீவர் போன்ற ஒரு கருவி அனைவருக்கும் தரப்படுகிறது. அதில் நமக்குத் தேவையான மொழியை 'ஆன்' செய்தால் நாம் செல்லும் இடம், பக்கத்திலுள்ள கட்டிடங்கள் பற்றிய வரலாறு, பாலங்களைப் பற்றிய குறிப்புகள் அத்தனையும் தெரிந்து கொள்ளலாம்.
சிறியோர் முதல் முதியோர் வரை குட்டைப் பாவாடை, டீஷர்ட் காஸ்ட்யூமில் சென்று கொண்டிருக்க, நீளமான ஏகப்பட்ட சரிகையுள்ள பட்டுப் புடவையை அணிந்து பாரீஸை சுற்றிய என்னை அத்தனை பேரும் கண்கள் விரியப் பார்த்தார்கள்! சின்னக் குழந்தைகளும் வாய்விரிய என்னையும்,
புடவையையும் தொட்டுப் பார்த்தது வேடிக்கையாக இருந்தது!
இவ்வளவு தூரம் வந்து ஷாப்பிங் பண்ணாமல் செல்வதா? பாரீஸ் என்றாலே செண்ட்டுகளும், சோப்புகளும், அழகு சாதனப் பொருட்களும் தானே? விலைதான் நம் பணத்தில் கணக்கு செய்தால் தலை சுற்றுகிறது! கடைகளை மாலை ஏழு மணிக்கே மூடிவிடுகிறார்கள். சனி, ஞாயிறு கிழமைகளில் 'விண்டோ ஷாப்பிங்' தான் செய்யலாம்!
கடைகளில் கண்ணாடிக் கதவுகள் இருப்பதால் உள்ளே இருக்கும் அத்தனை சாமான்களையும் வைர, தங்க நகைகளைக்கூட வெளியிலிருந்தே பார்த்து ரசிக்கலாம்! போலீசார் எல்லா இடத்திலும் இருப்பதால் திருட்டுப் பயமே இல்லை. இரவு நகரம் என்பதற்கேற்ப காபரே, இரவு கிளப்புகள் என்று பல பொழுதுப் போக்கு ஐட்டங்களும் இங்கே உண்டு.
மென்மையாக, இனிய முகத்துடன், புன்சிரிப்புடன் நம்மைப் பார்த்து 'ஹலோ' சொல்லிச் செல்லும் பாரீசின் மக்கள் மனதைக் கவர்கிறார்கள். என் கனவை நிறைவேற்றிய பாரீஸ் பயணம் இன்னும் என் கண்களிலேயே கலர் ஃபுல்லாக இருக்கிறது!
Comments
Post a Comment