அரவணைப்பு
அந்த ஆலய வாசலில் எப்போதும் பிச்சைக்காரர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அன்று ஒருவிசேஷம் என்பதால் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. ராஜு தன்மனைவி அருணா, மகள் அட்சயாவுடன் கோவிலுக்கு வந்தான்.
அங்கு ஒரு குழந்தையுடன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒருபெண்ணைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. பார்க்க நன்றாக இருந்தாள். அருணா அவளுக்கு ஐம்பது ரூபாய் கொடுத்துவிட்டு, அவள் ஏன் பிச்சை எடுக்கிறாள் என்று கேட்டபோது, தான் நல்ல குடும்பத்தில் பிறந்து ஒரு பையனிடம் காதல் கொண்டு ஏமாந்துவிட்டதாகவும், திரும்ப பிறந்தவீடு செல்ல மனமில்லை என்றும், ஏதாவது வேலை கொடுத்தால் செய்வதாகவும் சொன்னது அருணாவிற்கு பாவமாக இருந்தது.
அருணா ராஜுவிடம் ...இவளைப் பார்த்தால் நல்ல குணமுடையவளாக இருக்கிறாள். பாவம் ஏமாந்து விட்டாள். சுயகௌரவம் இருப்பதால் பிறந்த வீட்டுக்கு திரும்ப மனமில்லை அவளுக்கு. இந்த நிலையில் அவளுக்கு ஒரு அரவணைப்பு தேவை. இவளை அழைத்துச் சென்று வேலைக்கு வைத்துக் கொள்ளலாமா?..
என்றாள்.
சற்று யோசித்தவன்,அதனால் ஏதாவது பின்விளைவுகள் வந்தால் என்னசெய்வது என யோசித்தான். அவளோ, ..என்னால் உங்களுக்கு எந்த கஷ்டமும் வராது. என்னைத் தேடி யாரும்வரமாட்டார்கள்.
எனக்குஒரு பாதுகாப்பு வேண்டும்..என்று அழுதாள்.
அன்று முதல் சந்தியா அவர்கள் வீட்டு வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள். அவளிடமிருந்த நேர்மை அருணாவுக்கு பிடித்துப் போனது. தன் வீட்டு பின்னாலிருந்த அவுட்ஹவுஸில் இருக்கச் சொன்னாள். வீட்டுவேலை செய்த நேரம் போக தபால் மூலம் படித்து தன் அறிவை வளர்த்துக் கொண்டாள்.
விரைவில் சந்தியா அருணாவின் நல்ல சிநேகிதியானாள். அவள் மகள் நந்தினியும் அட்சயாவும் இன்று சிறந்த தோழிகள்!
Comments
Post a Comment