குருக்ஷேத்திரம்
தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸம்வேதா யுயுத்ஸவ:
மாம்கா: பாண்டவாஸ்சைவ கிம்குர்வத் ஸஞ்சய: |
பகவத் கீதையின் முதல் ஸ்லோகம் இது. ‘தர்ம யுத்தம்’ எனப்பட்ட மகாபாரதப் போர் நடந்த ‘தர்ம க்ஷேத்ரம்’ எனப் போற்றப்பட்ட புண்ணிய பூமி குருக்ஷேத்திரம். உலகிற்கு பக்தி, கடமை, தர்மம், ஞானம் இவற்றை எடுத்துச் சொன்ன கிருஷ்ண பரமாத்மாவின் திருவாக்கிலிருந்து உபதேசித்த பகவத் கீதை பிறந்த புண்ணிய பூமி.
இத்தலத்தை மிதித்தாலும், வசித்தாலும், இங்குள்ள தீர்த்தங்களில் நீராடி, இங்குள்ள ஆலயங்களில் அருளாட்சி செய்யும் கடவுளரை வணங்கினாலும், நாம் செய்த அத்தனை பாவங்களும் நசித்துப் போகும். இத்தலத்தின் பெருமை, பழமையான வேதமான ரிக் வேதத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. தானம், தர்மம், தவம், அறம் இவற்றில் சிறந்து விளங்கியதாலேயே பகவான் கிருஷ்ணன் பாரதப் போர் நடத்த இவ்விடத்தைத் தேர்ந்தெடுத்தார்.
ரிக் வேதம், ஸத்பத் ப்ரம்மன், ஜாபாலி உபநிஷத், பகவத் கீதை, புராணங்கள், மகாபாரதம் போன்ற பல புனித நூல்களில் போற்றப்பட்ட இந்த குருக்ஷேத்திரம் பிறந்த தியாகக் கதையைப் பார்ப்போமா?
கவுரவ, பாண்டவர்களின் மூதாதையரில் ஒருவரான குரு மகாராஜா மகா தர்மங்களான உண்மை, பொறுமை, அன்பு, தூய்மை, தர்மம், தானம், தவம், பிரம்மசரியம் என்ற எட்டு வகை தர்மங்களும் நிலை பெற்று விளங்கும் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்க விரும்பினார். அதற்கென இவ்விடத்தைத் தேர்ந்தெடுத்து சிவபெருமானின் காளை வாகனத்தையும், எமதர்மனின் எருமையையும் கடனாகப் பெற்று, தனது தங்க ரதத்தை ஏராக மாற்றி உழ ஆரம்பித்தார்.
அதனைக் கண்ட இந்திரன் ‘இவ்விடத்தை எதற்கு உழுகிறாய்?’ என்று கேட்க, ‘எட்டு தர்மங்கள் நிலைபெறும் விதைகளை விதைக்கப் போகிறேன்’ என்று சொன்னார், மகாராஜா குரு! ‘அதற்கான விதைகள் எங்கே?’ என்று கேட்ட இந்திரனிடம், ‘அவை என் வசமே இருக்கிறது’ என்று கூறிய குருவைக் கண்டு சிரித்தபடி மறைந்து விட்டான் இந்திரன்.
மீண்டும் தொடர்ந்து குரு உழுது கொண்டேயிருக்க, மகாவிஷ்ணு அவர் முன் தோன்றி இந்திரனைப் போன்றே கேட்க, குருவும் இந்திரனிடம் சொன்னது போன்றே தன்னிடமுள்ள அஷ்ட தர்ம விதைகளை விதைக்கப் போவதாய் சொன்னார். மகாவிஷ்ணு, ‘விதைகளை என்னிடம் கொடு. நான் விதைக்கிறேன்’ என்றார். குரு சற்றும் தயங்காமல், ‘தன் உடலே அதற்கான விதை’ என்று சொல்லி, தன் வலக்கையை நீட்ட, பகவான் தன் சக்ராயுதத்தால் அதனை ஆயிரம் கூறுகளாக்கி மண்ணில் விதைத்தார். இதே போன்று மற்ற எல்லா அவயவங்களையும் சக்கராயுதத்தால் துண்டித்து, குருவால் உழப்பட்ட 100 மைல் அளவுள்ள பூமியில் விதைத்தார். அவ்விடமே புனிதம் மிகுந்த குருக்ஷேத்திரம்.
குருவின் தியாகத்தை மெச்சிய விஷ்ணு அவருக்கு இரு வரங்கள் கொடுப்பதாய் சொல்ல, குருவும், ‘கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கப்போகும் இந்நகரம் தன் பெயரால் அழைக்கப்பட வேண்டுமென்றும், இங்கு இறப்பவர்கள் எத்தனை பாவம் செய்திருப்பினும், மோட்சம் பெற வேண்டும்’ என்றும் கேட்டார்.
கேடு செய்வோர்க்கும், வீடு பேறு தரும் நோக்கத்தில்தான் காக்கும் தெய்வம் கண்ண பரமாத்மாவும் போர் நடத்த இவ்விடத்தைத் தேர்ந்தெடுத்தார் போலும். என்னே இறைவனின் கருணை! சரஸ்வதி, திருஷத்வதி என்ற இரு நதிகளுக்கிடையே அமைந்திருந்ததாம் இந்த நகரம். ஆனால் இந்த இரண்டு நதிகளுமே இன்று மறைந்து விட்டனவாம். பிரம்மக்ஷேத்ரா, பிருகு க்ஷேத்ரா, ஆர்யவரட், சமந்தபஞ்சக் என்ற பெயர்களைக் கொண்ட குருக்ஷேத்திரம் மகாபாரத காலத்தில் ‘பஹூதான்யகா’ (வளமையான நகரம்) என்ற பெயரைக் கொண்டிருந்தது.
ஆரியர்கள் காலத்திற்குப் பின் நலிவடைந்த குருக்ஷேத்திரம் ஹர்ஷரின் ‘பொற்கால ஆட்சி’யில் மிகச் சிறப்புப் பெற்று, கல்வி, கேள்விகளில் சிறந்து தலைநகரமாக விளங்கியது. நாட்டு மக்கள் விருந்தோம்பல், நன்னடத்தை, அறிவு, பண்பில் சிறந்து விளங்கியதாகவும், தலைநகர் மிகப் பெரிய கடை வீதிகள், பள்ளிகள், கல்லூரிகள், அரண்மனைகளுடன் மிக அழகாக விளங்கியதாகவும் சீனப் பயணி ஹூவான் சுவாங்கும், கவி பாணரும் தம் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். அதன் பின் முகலாய அரசர்களால் அழிக்கப்பட்டு பெருமை இழந்த இந்த நகரம் 1857-ல் ஆங்கிலேயரின் மாவட்டத் தலைநகராக மாறியது.
இங்கு மாபெரும் மகாபாரதப் போர் 5000 ஆண்டுகளுக்கு முன் பதினெட்டு நாட்கள் பயங்கரமாக நடந்ததில் 166,00,66,620 வீரர்கள் மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது. கேட்கும்போதே மனம் பதறுகிறதே! இங்கு தோண்டுமிடமெல்லாம் எலும்புக் கூடுகளாகவே இருக்குமாம். பாரதப் போரில் நடந்த ஒவ்வொரு சம்பவம் சம்பந்தமாகவும், அபிமன்யு வதம் நடந்த இடம், கர்ணனின் சக்கரம் மாட்டிக் கொண்டது. பீஷ்மர் அம்புப் படுக்கை, துரியோதனன் இறந்த இடம் என்று பல இடங்கள் சரித்திரம் பேசுகின்றன.
அடேயப்பா! இவ்வூரில் கால் வைத்த இடமெல்லாம் ஆலயங்கள். கண் திரும்பிய இடமெல்லாம் புண்ணிய தீர்த்தங்கள். ஒவ்வொரு தீர்த்தமும் எத்தனை பிரம்மாண்டமானவை. பார்க்கும்போதே பிரமிக்க வைக்கின்றன.
கி.பி. 11-ம் நூற்றாண்டில் ‘அல்பெருனி’ என்ற அறிஞரால் ‘கிதாப்-உல்-ஹின்ட்’ என்ற நூலில் ‘ஒரு பெரிய கடல் போன்று காணப்படுவதாக’ எழுதப்பட்ட , பிரம்மசரோவர் 3860 அடி நீளமும், 1880 அடி அகலமும் கொண்டது. படைப்புக் கடவுள் பிரம்மாவினால் உண்டாக்கப்பட்ட இத்தீர்த்தத்தில் சூரிய கிரகணத்தன்று உலக முழுவதிலிருந்து மக்கள் புனித நீராடுவதற்கென்று இங்கு வருகிறார்களாம். பதினைந்து லட்சம் பேருக்கு மேல் புனித நீராடுவதாகக் கூறப்படுகிறது.
இக்குளத்தின் நடுவில் சர்வேசுவர் மகாதேவ் ஆலயம் உள்ளது. ஆலயத்திற்கு செல்ல அழகான பாலம் ஒன்று உள்ளது. இம்மகாதீர்த்தத்தின் இரு கரைகளில் போரின் சமயம் பாண்டவ, கவுரவர்கள் தங்கியிருந்தார்களாம். இதன் வட திசையில் கவுரவ, பாண்டவ ஆலயம் உள்ளது. இக்குளத்தின் நடுவில் ‘புருஷோத் தம்புரா’ என்ற இடத்தில் ‘சந்த்ர கூப்’ எனும் கிணறு உள்ளது. இதில்தான் பாண்டவர்களும், திரவுபதியும் நீராடுவார்களாம். இதையெல்லாம் காணும்போது நம் மனம் மகாபாரத காலத்துக்கே செல்வதைத் தடுக்க முடியவில்லை.
மகாபாரதப் போர் என்றதுமே நம் நினைவில் தோன்றுவது கீதோபதேசக் காட்சி. போர்க்களத்தில் நின்று மனம் கலங்கிய பார்த்தனுக்கு, தர்ம, அதர்மத்தை விளக்கி, மறத்தை நீக்கி, அறத்தை நிலை நாட்டுவதே க்ஷத்திரிய தர்மம் என எடுத்துக் கூறி, “பிறந்தவருக்கு இறப்பு நிச்சயம். கடமையைச் செய். பலனை எதிர்பாராதே” என்று தைரியம் கொடுத்து கிருஷ்ண பரமாத்மா, கீதையை உபதேசித்து, தன்னுடைய விசுவரூப தரிசனம் கொடுத்த ‘ஜியோதிசர்’ என்ற இடத்தைக் காணும் போது மெய் சிலிர்க்கிறது.
‘ஆகா! அந்தக் காட்சி எப்படி இருந்திருக்கும்?’ என்று மனக் கண்ணால் கற்பனை செய்யத் தோன்றுகிறது. அன்றிலிருந்து இன்று வரை அந்நிகழ்ச்சிக்கு சாட்சியாய் நிற்கும் பெரிய ஆலமரம், 5000 வருடத்திற்கு முற்பட்ட வடவிருக்ஷம். பல முறை வெட்டியும் துளிர்த்து விட்டதாம். இம்மரத்தின் வேரும், விழுதுகளும் கீதோபதேசம் கேட்ட புண்ணியம் பெற்றிருக்குமோ? ஆலமரத்தின் விழுதுகளை வெட்டி அதனைச் சுற்றி கம்பி வலை போட்டு பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
மரத்தின் கீழ் பளிங்கிலான கிருஷ்ணனின் பாதங்களும், கீதோபதேசக் காட்சியும் கண்ணாடிப் பெட்டிக்குள் உள்ளன. அருகிலேயே பெரிய அளவிலான கீதோபதேசக் காட்சியின் சிலை நிறுவப்பட்டுள்ளது.
இங்குள்ள ஆலயத்தில் மிகப் பழமையான லிங்கம் உள்ளது. அருகிலுள்ள ஜியோதிசர் தீர்த்தம் 1000 அடி நீளமும், 500 அடி அகலமும் கொண்டது. சூரிய கிரகணத்தின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் இத்தீர்த்தத்தில் நீராடி, இதன் நீரை அங்குள்ள புனித ஆலமரத்துக்கு ஊற்றி, கீதையைப் படித்துவிட்டு செல்வார்களாம். இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை தோன்றிய இடத்தில் சற்று நேரம் தியானம் செய்து, மனக் கண்ணால் கண்ணனின் விசுவரூப தரிசனத்தை கண்ட போது, மனம் மிக லேசாகிறது. அவ்விடத்தை விட்டு அகலவே மனமில்லை.
அழகான கண்ணைக் கவரும் தோட்டத்துடன் அமைதியாகக் காட்சி தரும் ‘பிர்லா மந்திரி’ல் ‘கஜ்கண்டா’ என்ற பெயரில் பெரிய பளிங்கு மணி உள்ளது. ‘கடவுளை நம்பினோர் கைவிடப்படார்’ என்ற வார்த்தைக்கு இலக்கணமாக, போரின் சமயம் ‘டிட்டு’ என்ற பறவை, தன் முட்டைகளுக்கு பாதிப்பு ஏற்படுமே என மனம் கலங்கி இறைவனை வேண்டியபோது, பகவான் ஒரு யானையின் கழுத்து மணி அம்முட்டைகளின் மேல் அறுந்து விழும்படி அருளினார். அதனால் போர் நடந்த 18 நாட்களும் அம்முட்டைகளும், பறவையும் அதனுள் பாதுகாப்பாக இருந்தனவாம். என்னே! கண்ணனின் கருணை.
இங்குள்ள சன்னிஹித் தீர்த்தத்தில் ஒவ்வொரு அமாவாசையன்றும், மற்ற அனைத்து புண்ணிய நதிகளும் வந்து விடுவதால் இங்கு அமாவாசையன்று நீராடுவதும் முன்னோர் காரியங்கள் செய்வதும் விசேஷமாகக் கருதப்படுகிறது. 1500 அடி நீளமும், 500 அடி அகலமும் கொண்ட இக்குளத்தின் புனித நீரை சூரிய கிரகணத்தன்று கையால் தொட்டாலே நூறு அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டுமாம்.
பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்தபோது அர்ஜூனன் பீஷ்மருக்காக வரவழைத்த கங்கை ‘பீஷ்ம குண்ட்’ என்ற இடத்தில் உள்ளது.
தன் மகன் அபிமன்யுவைக் கொன்ற ஜயத்ரதனைத் தேடி அர்ச்சுனன் சென்ற போது குதிரைகள் காயம் பட்டு களைத்து விட, கிருஷ்ணனின் ஆணைப்படி அர்ச்சுனன் அம்பு விட்டு நீர் வரவழைத்த இடத்தில் ‘பன் கங்கா’ என்ற தீர்த்தம் உள்ளது.
ஹர்ஷரின் மூதாதையரால் கட்டப்பட்ட ஸ்தானேஷ்வரிலுள்ள மகாதேவ் ஆலய நீருக்கு குஷ்ட ரோகத்தை குணப்படுத்தும் சிறப்பு உண்டாம். கோவில் மிக அழகாக உள்ளது. பாண்டவர்கள் போருக்கு முன் இச்சிவபெருமானை வணங்கி ஆசி வேண்டிச் சென்றார்களாம்.
இங்குள்ள தீர்த்தங்களில் சூரிய கிரகண சமயம் நீராடுவது மிக விசேஷமாகக் கூறப்படுவது, சூரிய கிரகணத்துக்கும், பாரதப் போருக்கும் உள்ள சம்பந்தத்தால் மட்டுமல்ல; (அர்ச்சுனன் உயிரை சூரிய கிரகணத்தின் மூலம், சூரியன் அஸ்தமனமாகி விட்டதாக கவுரவர்களை எண்ண வைத்து கிருஷ்ணன் காப்பாற்றியது நாம் அறிந்ததே!) அதற்கு பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே ராமர் தனது தாய்மார்கள், சீதையுடன் வந்து பிரம்மசரோவரில் நீராடியதாக புராணம் கூறுகிறது.
கிருஷ்ணர் குருக்ஷேத்திரத்துக்கு சிறு வயது முதலே அடிக்கடி வருவாராம். துவாரகையிலிருந்து கண்ணனும், பலராமனும், கோகுலத்திலிருந்து நந்தகோபன், யசோதை, கோபியர்களும் இவ்விடத்தில் சந்திப்பார்களாம். ராதையும், கண்ணனும் சந்தித்து மகிழ்ந்தது குருக்ஷேத்திரத்தில் தானாம்.
1567-ல் பேரரசர் அக்பர் சூரிய கிரகணத்தின் போது குருக்ஷேத்திரம் வந்திருந்தாராம்.
இது ஒரு சிறந்த சக்தி பீடமாகும். தட்ச யாகத்தின்போது, சிவன் சுமந்து திரிந்த சக்தியின் உடலை மகாவிஷ்ணு தன் சக்கரத்தால் சிதைத்த போது, சக்தியின் வலது முழங்கால் பாகம் இங்குள்ள ஒரு கிணற்றில் விழுந்ததாம். அந்த இடமே அரியானாவின் ஒரே சக்தி பீடமாக விளங்கும் பத்ர காளி ஆலயம். அன்னை கருணைக் கண்களோடு, அண்டினாரை ஆட்கொள்ள ஆண்டாண்டு காலமாய் நின்று கொண்டிருக்கும் காட்சி கண்களை நிறைக்கிறது. அன்னையின் பாதம் விழுந்த கிணற்றை நன்கு பராமரித்து, அதன் மேல் ஒரு தாமரையைச் செய்து அன்னையின் பாதத்தை பளிங்கினால் செய்து வைத்துள்ளார்கள்.
மகாபாரதப் போரில் வெற்றி பெற்ற பின், காணிக்கையாக இங்கு தங்கக் குதிரை செய்து வைத்தாராம் கண்ணபிரான். கடவுளே வேண்டிக் கொள்ளும் போது சாமானியரான நாம் எம்மாத்திரம்? வேண்டிக் கொண்டவை நிறைவேறியதன் அடையாளமாக ஏகப்பட்ட மண் குதிரை பொம்மைகள் அணிவகுத்து நிற்கின்றன. குட்டிக் கண்ணனுக்கு முடியிறக்கும் விழா இங்குதான் நடந்ததாம். கோவில் மிகச் சிறியதாகக் காணப்பட்டாலும் சமீபத்தில்தான் பிரபலமடந்து வருவதால், சமீப காலமாக புதிது செய்யப்படுகிறது.
இங்குள்ள கிருஷ்ணா மியூசியம், கீதா பவன் இவற்றில் கிருஷ்ணா மற்றும் முதல் நூற்றாண்டின் பகவத் கீதை பிரதி பற்றிய அனைத்து விவரங்களும், காண்பவர் ரசிக்கும் விதமாக அமைத்துள்ளனர். முக்கியமாக ராசலீலா, பூதனை வதம், பீஷ்மர் அம்புப் படுக்கை ஆகிய நிகழ்ச்சிகள் ஆளுயர பொம்மைகளாக சிறந்த கலையம்சத்துடன் உணர்ச்சி பாவங்களுடன் செய்திருப்பது பாராட்ட வேண்டிய விஷயம். நவம்பர் இறுதியில் ‘கீத ஜெயந்தி’ உற்சவம் மிக விமரிசையாக நடைபெறுகிறது.
ஜெயராம் ஆசிரமத்தில் அமைக்கப்பட்டுள்ள பீஷ்மரின் அம்புப் படுக்கை, கர்ணன் கொடை போன்ற பளிங்குச் சிற்பங்கள் மிக அருமையாக உள்ளன. கண்ணுக்கு விருந்து படைக்கின்றன.
குருக்ஷேத்திரம் இந்துக்களுக்கு மட்டுமின்றி, சீக்கியர்களின் புனிதத் தலமாக விளங்கியதன் அடையாளமாக பல குருத்வாராக்களும், ஆசிரமங்களும் உள்ளன.
பேரரசர் ஷாஜஹானால் ஈரானைச் சேர்ந்த சாது ஷேக் சிலி என்பவரின் நினைவாக எழுப்பப் பட்டுள்ள ஷேக் சிலி முக்பாரா என்ற கோட்டை இங்கு அமைந்துள்ளது. வெண் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டுள்ள இக்கோட்டை மிக அழகாக இருப்பதுடன் அரசாங்கத்தால் நினைவுச் சின்னமாக, சுற்றுலா தலமாகப் பராமரிக்கப்படுகிறது. இதனுள் ஷேக் சிலியின் சமாதி அமைந்துள்ளது.
குருக்ஷேத்திராவிற்கு டெல்லி மற்றும் சண்டிகரிலிருந்து அரசுப் பேருந்துகள், சுற்றுலா பேருந்துகள் மற்றும் டாக்சியின் மூலம் செல்லலாம்.
ராதாபாலு
Comments
Post a Comment