இணைந்த மதங்கள்



நாள்தோறும்...

"வ்ருஷாலி! அவளை வெளியே போகச் சொல்லு. நான் ராக்கியெல்லாம் கட்டிக்கொள்ள தயாராக இல்லை. எனக்கும், அவளுக்கும் எந்த உறவும் இல்லை" ராகேஷ் கோபத்துடன் வெளியே சென்று விட்டான்.

ஷீலாவுக்கு அழுகை வந்து விட்டது. வ்ருஷாலியின் தோள் மேல் சாய்ந்து அழ ஆரம்பித்து விட்டாள்.

"அண்ணி! நான் என்ன பெரிய தப்பு செய்து விட்டேன்? என் மனதுக்குப் பிடித்தவரைக் கல்யாணம் செய்து கொண்டது தப்பா? சுந்தர் என்னை எப்படி வைத்துக் கொண்டிருக்கிறார் தெரியுமா?"

"அழாதே ஷீலா! நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்து விட்டேன். உன் அண்ணன் மனதை மாற்றவே முடியவில்லை. நீ ஏதோ மிகப்பெரிய தப்பு செய்து விட்டதாகச் சொல்கிறார். நான் என்னம்மா செய்வது?"
வ்ருஷாலியின் இயலாமை அவள் பேச்சில் தெரிந்தது.

"அண்ணா எப்பவுமே அப்படித்தானே அண்ணி! தான் எடுத்த முடிவிலிருந்து மாறவே மாட்டார். நான் இதுவரை ஒரு வருஷம் கூட ரக்க்ஷா பந்தனுக்கு அண்ணனுக்கு ராக்கி கட்டி, திலகம் வைக்காமல் இருந்ததில்லை. அண்ணன் இந்த ஒன்பது மாதத்தில் கொஞ்சமாவது மனம் மாறியிருப்பார் என்று நினைத்து தான் வந்தேன்".

"உன்னை நினைத்து எனக்கு மிக வருத்தமா இருக்கு ஷீலா."

"சுந்தரிடம் கேட்டபோது 'தாரளமாப் போயிட்டு வா. நீ உன் பிறந்த வீட்டுக்குப் போவதை நான் எப்பவும் தடுக்க மாட்டேன்'னு சொன்னார். நான் இப்போ அவரிடம் போய் என்ன சொல்வது"

மனசு தாங்காமல் விசும்பினாள் ஷீலா.

"நல்ல நாளும் அதுவுமா அழாதே ஷீலா. உள்ளே வா சாப்பிடு.... பிறந்த வீட்டுக்கு வந்துவிட்டு வெறும் கையோடு போகக் கூடாது. இன்னும் ஒரு வருஷம் போனால் எல்லாம் சரியாகிவிடும்"

"வேண்டாம் பாபி! அண்ணன் கையில் ராக்கி கட்டி, அவரிடம் ஆசி வாங்கலாம்னு வந்தேன். அது நடக்கவில்லை. நான் வரேன் பாபி" அண்ணியை வணங்கி அணைத்து விடை பெற்றவளின் மனம் வருத்தமாக இருந்தது.

ஏமாற்றத்துடன் திரும்பியவளை பழைய நினைவுகள் ஆக்கிரமித்தன.
நினைவு தெரிந்த வயது முதலே ஷீலாவுக்கு மிகவும் பிடித்த பண்டிகை ரக்க்ஷா பந்தன். சிறு வயதில் 'அண்ணா எவ்வளவு பணம் தருவான், என்ன வாங்கலாம்' என்று யோசித்தவள், பெரியவளானதும் தனக்கு வேண்டியதை பரிசாக வாங்கித் தரச் சொல்லி அண்ணனிடம் கேட்பாள். ராகேஷுக்கும் ஷீலாவிடம் கொள்ளை பிரியம். அவன் முதன்முதலாக சம்பாதித்து ஷீலாவுக்கு வாங்கிக் கொடுத்த செயினை இதுவரை அவள் கழுத்திலிருந்து கழற்றியதேயில்லை.

ஷீலாவுக்கு அப்பொழுது வயது பதினெட்டு... வெளியூர் சென்று காரில் திரும்பிய அவர்களின் பெற்றோர் இருவரும் விபத்தில் இறந்துவிட, அன்று முதல் ஷீலாவுக்கு அம்மா, அப்பா எல்லாமே ராகேஷ்தான்! அப்பாவின் பிசினஸ் வேண்டாமென்று வேறு வேலையில் இருந்த ராகேஷ், இனி தங்கையின் பொறுப்பு தன்னிடம் என்பதைப் புரிந்து கொண்டு, தன் அப்பாவின் பிசினஸை தான் ஏற்று நடத்த ஆரம்பித்தான்.
விரைவில் அவனது புத்திசாலித் தனத்தால் உயர்ந்த நிலைக்கு வந்தான்.

ஷீலாவை சிறிதும் கஷ்டப்படாமல் பார்த்துக் கொண்டவன் அவள் பட்டப்படிப்பை முடித்ததும் திருமணம் செய்யப் போவதாகச் சொன்னான்.
தனக்கு எம்.பி.ஏ படிக்க ஆசை என்ற ஷீலாவை, அவள் மனம் கோணாமல் படிக்க வைத்தான். ஷீலாவின் வற்புறுத்தலால் வ்ருஷாலியை மணந்தான். வ்ருஷாலி அண்ணியாக மட்டுமில்லாமல், ஷீலாவுக்கு அம்மாவாகவும் இருந்து அவளை அன்போடும், பாசத்தோடும் கவனித்துக் கொண்டாள்.

எம்.பி.ஏ படிக்கும்போது சுந்தருடன் ஏற்பட்ட நட்பு, காதலாக மாற, இருவரும் இணைந்தால் வாழ்க்கை இனிமையாகும் என்ற எண்ணம் உறுதிப்பட்டது., ஷீலா தன் காதலைப் பற்றி அண்ணியிடம் சொன்னாள்... ராகேஷோ எதையும் காதில் வாங்காமல், காதலைப் பற்றி புரிந்து கொள்ளாமல் தான் பார்க்கும் பையனைத்தான் ஷீலா மணக்க வேண்டும் என வற்புறுத்தினான். ஷீலாவின் அழுகை அவன் மனதைக் கரைக்கவில்லை.

"அண்ணி.... என்னால் சுந்தர் இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை... அவர் நமக்கு எதிலும் குறைவில்லை. நல்ல வேலை.... கை நிறைய சம்பளம்... அவர் பெற்றோர் எங்கள் திருமணத்திற்கு சம்மதித்து விட்டனர். நீங்களாவது அண்ணாவிடம் எடுத்து சொல்லுங்கள் பாபி"
வ்ருஷாலி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை ராகேஷ்.

சுந்தரை நேரில் சந்தித்த போது அவனுடைய நல்ல குணத்தையும், மனதையும் புரிந்து கொண்ட வ்ருஷாலி ஷீலாவை அவன் பெற்றோர் சம்மதத்துடன் மணம் செய்து கொள்ளச் சொன்னாள். அடுத்த சில நாட்களில் திருமணம் முடித்து, ராகேஷிடம் ஆசி வாங்க வந்தபோது அதிர்ச்சியடைந்த ராகேஷ், அவளுடனான தன் உறவு முடிந்து விட்டது என்று சொல்லி விட்டான். அன்று அண்ணனைப் பார்த்த பிறகு இன்றுதான் ஷீலா அவன் வீட்டுக்கு வந்தாள்.

சுந்தரும், அவன் பெற்றோரும் அவளை வேற்று மாநிலத்தவள் என்று எண்ணாமல் மிகவும் அன்போடு நடத்த, வாழ்க்கை பூஞ்சோலையாக இருந்தது... அவள் பண்டிகைகளைக் கொண்டாட வீட்டில் யாரும் தடை சொல்லாததால்தான், ரக்க்ஷா பந்தனுக்கு ராக்கி கட்டிவிட்டு வருவதாகச் சொல்லி அண்ணன் வீட்டுக்கு வந்தாள் ஷீலா, அண்ணன் மனம் மாறியிருக்கும் என்ற எண்ணத்தில்.

பழைய நினைவுகளை அசை போட்டபடி வந்தவளை, யாரோ பலமாகத் தள்ளுவது போல் தடுமாறி கீழே விழுந்தாள். தன்னைச் சுற்றி கூட்டம் கூடுவதையும், ஒரு காருக்கு முன்னால் ஒருவர் விழுந்து அடிபட்டுக் கிடப்பதையும் பார்த்தவள் அப்படியே நினைவிழந்தாள்.
கண் விழித்தவள் தான் ஆஸ்பத்திரியில் இருப்பதை அறிந்து, அங்கிருந்த நர்ஸிடம் விபரம் கேட்டாள்.

"நர்ஸ்....எனக்கு என்ன ஆச்சு?"

"ஒண்ணுமில்லை மேடம்... உங்களுக்கு லேசான அடிதான்.. வேறு ஒன்றும் இல்லை... ஆனால் அந்த ட்ராஃபிக் போலீஸ்காரருக்குதான் தலையில் நல்ல அடி."

"என்ன சொல்றீங்க?"

"ஆமாம் மேடம்... நீங்கள் தெருவைக் க்ராஸ் பண்ணும்போது, எதிரில் வந்த காரை கவனிக்காததைப் பார்த்து, அவர்தான் உங்களைத் தள்ளிவிட்டார்... தான் நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். நல்ல வேளை உயிர் தப்பியது."

"ஐயோ. இப்போ எப்படி இருக்கிறார்?உயிருக்கு ஆபத்தில்லையே?"

"இப்பதான் அவருக்கு நினைவு வந்தது... கண் விழித்ததும் உங்களைப் பற்றிதான் கேட்டார்."

"நர்ஸ்! என்னுடைய ஹேண்ட் பேக் எங்கே?"

"இதோ இருக்கு மேடம்... அதில் இருந்த விலாசம் பார்த்து இப்போதான் உங்கள் கணவருக்கு போன் செய்தோம்."

"நான் அந்த போலீஸ் காரரைப் பார்க்கணுமே?"

"தாராளமா பார்க்கலாம்... பக்கத்து ரூமில்தான் இருக்கார்.."

அடுத்த அறையில் நுழைந்தவள் அந்த ட்ராஃபிக் போலீஸைப் பார்த்து நன்றிப் பெருக்கில் கைகளைக் கூப்பினாள்; வார்த்தைகள் வரவில்லை; கண்ணீர் கண்களை மறைத்தது.

"அண்ணா! உங்கள் வலது கையை நீட்டுங்கள்"
எதுவும் புரியாமல் வியப்புடன் பார்த்த அவரது நீட்டிய கையில் தான் வைத்திருந்த ராக்கியைக் கட்டினாள். நெற்றியில் திலகம் இட்டு, தான் கொண்டு வந்த இனிப்பை அவரது வாயில் போட்டாள்.

"என்னம்மா இதெல்லாம்?" ஒன்றும் புரியாமல் வினவினார் அவர்.
ரக்க்ஷா பந்தன் பற்றியும், தான் தன் அண்ணன் வீடு சென்று ஏமாற்றத்துடன் திரும்பியதைச் சொன்னாள்.
"என் உயிரைக் காப்பாற்றிய நீங்கள்தான் என் அண்ணா. என்னை ஆசீர்வதியுங்கள்."
பாதங்களைத் தொட்டு வணங்கியவளுக்கு ஆசி கூறியவர், தன்னிடம் இருந்த ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தார்.

"எனக்கு அக்கா, தங்கச்சி இல்லையேன்னு ரொம்ப வருத்தப் பட்டிருக்கேன்மா... இந்த ரக்க்ஷா பந்தன் நாள்ல எனக்கு ஒரு தங்கச்சி கிடைச்சது சந்தோஷமா இருக்கும்மா. நீ வாழ்க்கையில எல்லா நலனும் பெற்று அமோகமா இருக்க ஆண்டவரை வேண்டிக்கறேன்மா. இப்ப என்கிட்ட ஐம்பது ரூபாதான்மா இருக்கு. இதை என் அன்புப் பரிசா வெச்சுக்கம்மா".

அதே சமயம் சுந்தர் பதட்டத்துடன் உள்ளே வந்தான்.
"என்னாச்சு ஷீலா... தெருவில பார்த்து நடக்க வேண்டாமா? எங்க அடி பட்டது?" நடந்த விஷயங்களைச் சொன்னாள் ஷீலா.

"என் மனைவியைக் காப்பாத்தின உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதுனே தெரியல சார். . நர்ஸ்... இவரோட சிகிச்சைக்கு ஆன பில்லையும் கொடுங்க... நான் பே பண்ணிடறேன்."

"அதெல்லாம் வேணாம்.. நான் பார்த்துக்கறேன்... நீங்க தங்கச்சியை அழைச்சுகிட்டு வீட்டுக்கு போங்க. போய் நல்லா ரெஸ்ட் எடும்மா".

"இது எங்க கடமை. உடம்பு சரியானதும் ஒரு நாள் கண்டிப்பா வீட்டுக்கு வாங்க அண்ணா."

"ஒரு நாள் என்ன இனி அடிக்கடி என் தங்கச்சி வீட்டுக்கு வருவேன்ம்மா! இந்த விபத்துனால எனக்கு ஒரு சகோதரி கிடைச்சதை நினைச்சு எனக்கு மகிழ்ச்சியா இருக்குமா!"

"சரி சார்...உடம்பை பார்த்துக்கோங்க... நாங்க வரோம்... உங்க பேர்?"

"இஸ்மாயில்"

மதங்களுக்கப்பால் இணைந்த மனங்களை எண்ணி நிறைவான சந்தோஷத்துடன் சென்றனர், ஷீலாவும், சுந்தரும்!

Comments

Popular posts from this blog

கண்ணாமூச்சி

அசரீரி