கொலுசு ஒலி
அது ஒரு சிறு கிராமம்அன்று கமலியின் கணவரின் தாத்தாவிற்கு தொண்ணூறு வயது நிறைந்ததை ஒட்டி ஹோமம், பூஜைகள் நடந்தது. அவருக்கு மனைவி மறைந்து ஐந்து ஆண்டுகள் ஆகிறது. அவருக்கு நான்கு மகன்களும் இரண்டு மகள்களுமாக பெரிய குடும்பம். இன்று அவரின் ஆசிகளைப் பெற அத்தனை பேரும் குடும்பத்தோடு வந்திருந்தார்கள்.ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக வீடே அமர்க்களமாக இருந்தது. அன்று இரவு எல்லோரும் நிலா வெளிச்சத்தில் அமர்ந்து சாப்பிட்டபின் மாடியில் படுத்துக் கொண்டனர்.
கமலிக்கு திறந்த வெளியில் படுத்து பழக்கமில்லாததால் வெகு நேரம் தூக்கம் வரவில்லை. சற்று கண் அசந்த நேரம் ஜல்ஜல் என்று கொலுசு ஒலி சத்தம் கேட்டது. கொலுசு அணிந்த யாரோ கீழே செல்கிறார்கள் என நினைத்தவள் திரும்பிப் படுத்து உறங்க முயற்சித்தாள். அந்த சத்தம் நெருங்கி வருவது போல் கேட்க, எழுந்து பார்க்கலாமா என்று நினைத்தவள் பயத்தில் தலையோடு கால் போர்த்திக் கொண்டு படுத்து விட்டாள். சற்று நேரத்தில் அந்த ஒலி வெகு தூரம் சென்று நின்று விட்டது.
காலையில் எழுந்த கமலிக்கு இந்த விஷயம் மனதிலேயே இருந்து பயத்தை ஏற்படுத்தியது. ஏதாவது பேயோ, இறந்தவர் ஆவியோ என்றெல்லாம் மனதில் ஒரே குழப்பம்.
தன்னுடன் படுத்து இருந்தவர்
களிடம் இது பற்றிக் கேட்டாள். அவர்களுக்கு அப்படி ஒலி எல்லாம் கேட்க வில்லை என்று சொல்லியதுடன் 'உனக்கு பயத்தால் பிரமையாக இருக்கும்' என்றார்கள்.
கமலிக்கு குழப்பம் தீரவில்லை. தாத்தாவிடமே கேட்கலாம் என்று எண்ணி அவரிடம் இந்த விஷயத்தை ப் பற்றி சொல்லி விபரம் கேட்டாள்.
தாத்தா இவள் சொன்னதைக் கேட்டு மிகவும் ஆச்சரியப் பட்டார். 'நீ அந்த கொலுசு ஒலியைக் கேட்டாயா? நீ ரொம்பப் புண்ணியம் செய்து இருக்கிறாய் கமலி. முன் காலத்தில் நம் குல தெய்வமான பேச்சி அம்மன் இந்த கிராமத்து காவல் தேவதை. அவள் தான் இப்படி இரவில் வந்து காவல் காப்பதாக என் தாத்தா சொல்வார். ஆனால் அந்த கொலுசு சத்தம் மிகச் சிலருக்கு மட்டுமே கேட்கும். உன் பாட்டிக்கு அந்த ஒலி கேட்பதாக சொல்லி இருக்கிறாள். நீ ரொம்ப புண்ணியம் செய்தவள். பயப்பட வேண்டாம். ஆனால் எழுந்து அவளைப் பார்க்க நினைக்காதே. பார்வையை மறைத்து விடுவாளாம். எல்லாம் நல்லதற்கே' என்றார்.
இதைக் கேட்ட மற்றவர்கள் 'அப்படி யா? ஆச்சரியமா இருக்கே. அப்படி யாராவது பார்த்து அவர்கள் கண் பார்வை போயிருக்கா?' என்றனர்.
'ஆம். என் தாத்தாவின் உடன் பிறந்த தம்பி இதை நம்பாமல் பரிகசித்ததாயும், இரவு எல்லோரும் தடுத்தும் பார்த்த தாலும் அவர் கண் பார்வை மறைந்து விட்ட தாகவும் சொல்லக் கேட்டிருக்கிறேன்' என்றார்.
இந்த விபரம் அங்கு வந்திருந்த அனைவருக்கும் அதிசயமாக இருந்தது. கடவுள் தன்னை எப்படியெல்லாம் வெளிப் படுத்திக் கொள்கிறார் என்பது ஒரு பக்தியையும் ஏற்படுத்தியது.
அன்று இரவு கமலி தைரியமாக இரவில் படுத்ததோடு, தன் வேண்டுதல்களையும் நிறைவேற்ற வேண்டினாள்.
Comments
Post a Comment